
ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய “கந்தர் அனுபூதி”.
முருகப்பெருமானின் அருள் பெற்று அருணகிரிநாத சுவாமிகள், திருப்புகழ், மற்றும் கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, வேல் மயில், சேவல் விருத்தம், திரு வகுப்பு போன்ற பல பாடல்களை இயற்றியுள்ளார். அவை அனைத்திலும் இருந்து, கந்தர் அனுபூதி மட்டும் ஒரு தனித்தன்மையுடன், தனி சிறப்புடன் விளங்குவதை பார்க்கிறோம். கந்தர் அலங்காரம் அல்லது வேல் மயில் சேவல் விருத்தம், தனக்கு வெளியே தோன்றும் முருகனின் அழகை, அவன் ஏந்திய வேலின் சிறப்பை, அவன் வாகனம் மயிலின் சக்தியை, சேவலின் நர்குணங்களை எல்லாம் வர்ணிக்கின்றன. ஆனால் கந்தர் அனுபூதி அவர் தன்னிலே உணர்ந்த அனுபவத்தை விளக்குகின்றன.
அனுபவம் என்பது ஒருவரின் தனிப்பட்ட, அல்லது அவருக்கே உரிய ஒரு உணர்வு நிலை. அதை வேறொருவருக்கு எடுத்துரைக்க முடியாது. பிரம்ம முனிவர்கள் பல காலம் தபஸ் செய்து, ஞான நிலை அடைந்து தங்கள்அனுபவத்தை வேதம் உபநிஷத் போன்ற மகா காவ்யம் மூலமாக நம்மிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதுபோலவே முருகனை தன்னில் உணர்ந்த அனுபவத்தை நம்முடன் கந்தர் அனுபூதி மூலமாக பகிர்ந்துகொள்கிறார் அருணகிரிநாதர். குருநாதராக வந்து முருகன் அருளிய உபதேச சாரத்தை நமக்கும் அளித்து முருகனின் மலர் பாதத்தை அடையும் வழியை சொல்லி தருகிறார் திருவண்ணாமலை மாமுனிவர்.
கந்தர் அனுபூதியை பல ஆசிரியர்கள், ஆராய்ச்சி செய்து, பல கோணங்களில் கண்டு, விரிவாக எழுதியிருக்கிறார்கள், இனியும் எழுதுவார்கள். திரு வி எஸ் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய, கடந்த கந்த சஷ்டி அன்று வெளியான “கந்தர் அனுபூதி” நூல் ஞானத்தை மைய்யமாக கொண்டு எழுதியது என்று தெரிகிறது. பகவான் ரமண மகிரிஷி, திருமூலர் போன்ற முனிவர்கள் சொன்ன கருத்துக்களை பல இடங்களில் பார்க்க நேர்ந்தது.
ஒரு சராசரி மனிதன் தன்னை சார்ந்ததல்லாத பல விஷயங்களை தன்னோடு இணைத்துக்கொண்டு அல்லல்படுவதை நாம் பார்க்கிறோம். தான் பெற வேண்டியது ஒன்றும் இல்லை, ஆனால் இழக்க வேண்டியது நிறையவே இருக்கிறது என்று அவன் உணர்வதில்லை. அறியாமை, ஆசை, ஆணவம், பற்றுதல், புலன் இன்ப நாட்டம் போன்ற பல விஷயங்கள் தன்னை தொற்றிக் கொண்டிருக்கின்றன என்றும் அவற்றை இழப்பதே தனது இலட்சியமாக இருக்க வேண்டும் என்று அவன் உணர்வதில்லை.
“எல்லாமற என்னை யிழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூ பதியே” என்கிறார் அருணகிரிநாதர். அகப் பற்று, அதாவது தன்னோடு வைத்திருக்கும் பாசம், புறப் பற்று, அதாவது, தன் குடும்பம், தன்வீடு போன்ற வெளி விஷயங்களில் மீது கொண்ட பற்று, எல்லாம் அற்று, ஜீவபோதத்தையும் அற்று, இறைவனுடன் கலந்திருக்கும் நிலையே “எல்லாம் அற என்னை இழந்த நலம்” என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள்.
ஆணவமலம், கன்ம மலம் மாயை அனைத்தையும் இழந்து, தன்னையும் இழந்து நிற்கும் நிலையே, உயர்ந்த ‘ஆத்மசாஷாத்கார’ நிலை. பகவான் ரமண மகிரிஷி தன் வீடு உறவினர் அனைவரையும் விட்டு, அருணாச்சலரிடம் வந்து சரண் அடைகிறார். அவர் யாரை பார்த்தார் என்ற கேள்வி எழுந்தபோது பதில் சொல்ல அவர் அங்கு இருக்கவில்லை. ஏன் என்றால் அவர் அருணாச்சலரிடம் ஐக்கியமாகி இருந்தார். இந்த நிலையை அவரே ஒரு பாடலில் கூறுகிறார்: “கண்டவன் எவன் என கருத்தினில் நாட, கண்டவன் இன்றிட நின்றது கண்டேன்” என்கிறார். “ஓ! அருணாசலா, என்னுடைய மனதில் புகுந்து, என்னை பலாத்காரமாக இழுத்துவந்து உன்னுடைய இதயவீட்டில் சிறைப்படுத்தி கொண்டாய்“ என்கிறார் அவர் அக்ஷரமணமாலையில் இதே கருத்தை கந்தர் அனுபூதியில் நாம் காண்கிறோம். “யானாகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே: என்கிறார் ஸ்ரீ அருணகிரிநாதர். இது போன்ற பல நல்ல கருத்துக்களை திரு கிருஷ்ணன் அவர்களின் “கந்தர் அனுபூதி” நூலில் காண முடிகிறது.
முருகனை நோக்கி, “அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா” என்கிறார் கந்தர் அனுபூதியில். தனது பக்தனைக் காப்பாற்றி, ‘அருணகிரிநாதா’ என்றழைத்து ஜபமாலை கொடுத்து, முருகப்பெருமான் அளித்த முதல் உபதேசப்பொருள் ‘சும்மா இரு’ என்பதே ஆகும். “சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே” என்கிறார் அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில்.
சொல்லும், செயலும் அற்று, சுற்றுச்சூழலை மறந்து, தன்னையும் இழந்த நிலையில் இருப்பதுவே ‘சும்மா இருத்தல்’. அங்கே சொல் இல்லை, நினைவு இல்லை, உலகமுமில்லை. “ஒ! அருணாச்சலா, சும்மா நிற்கும் உன்னைப் பார்க்கும் பொழுது நீ என்னிடம் ‘சும்மா இரு’ என்று சொல்லாமல் சொல்வது போலத் தெரிகிறது” என்று அக்ஷரமணமாலையில் சொல்கிறார் பகவான் ரமணர். (சொல்லாது சோலிநீ சொல்லற நில் என்று சும்மா இருந்தாய் அருணாசலா..36). “சும்மா இருத்தல்” என்ற சொல்லுக்கு திரு கிருஷ்ணன் அளிக்கும் விளக்கத்தை அவர் வார்த்தையிலே பார்ப்போம்.
மேலோங்கி வரும் சிந்தனைகளே ஒருவனின் நிம்மதியை சீர்குலைக்க செய்கின்றன. சிந்தனைகளே இறைவனை அடைய பெரும் தடையாக இருக்கின்றன. சிந்தனையும் செயலும் அற்ற தூயநிலை அடைய, அறியாமை என்ற இருள்மறைய, ஷண்முகனை உள்ளே உணர ஒரு சிறந்த மார்க்கம் சும்மா இருப்பதே ஆகும்.
ஒரு செயலும் அற்று, ஒரு நினைவும் அற்று, மோன நிலையில் இருப்பதே ‘சும்மா இருத்தல்’. அங்கே மனம் இல்லை, உடல் இல்லை, புலன்கள் இல்லை; தன்னைத் தவிர, அதாவது ‘நான்’ எனும் உணர்வைத் தவிர வேறொன்றும் இல்லை. இதுவே உயரிய சமாதிநிலைக்கு ஒப்பாகும். “செயல் அற்று இருக்கச் சிவானந்தம் ஆகும், செயல் அற்று இருப்பார் சிவயோகம் தேடார், செயல் அற்று இருப்பார் செகத்தொடும் கூடார், செயல் அற்று இருப்பார்க்கே செய்தியுண்டாமே” என்கிறார் திருமூலர். (திருமந்திரம் 2293)
ஸ்ரீ ரமணமகிரிஷி சொன்னார்: “சும்மா இருத்தல் என்பது செயலும் சிந்தனையும் அற்ற நிலையில் இருப்பதுவே ஆகும்”. செயலற்று இருந்தாலும் மனம் அற்று இருப்பது எல்லோராலும் இயலாது. மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். வெளி உலகை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கும். அருணாச்சலம் மருதாச்சலம் விருத்தாச்சலம் என்று இறைவன் திருத்தலத்தை நாடிச் செல்கிறோம் ‘அச்சலம்’ என்றால் அசையாமல், இயங்காமல் இருந்தபடியே இருக்கும் நிலையைக் குறிக்கிறது. மனதை சலிக்காமல், அதாவது அசைய விடாமல், வெளியே போக விடாமல், உள்ளேயே நிலைத்து நிற்க செய்யும் தலம் அருணாச்சலம். “மனமே, அலைபாய்வதை விட்டு விட்டு, வேத ஆகமங்கள் போற்றுகின்ற, அழகிய, வெட்சிமலர்மாலையால் அலங்கரித்து நிற்கின்ற, தண்டை அணிந்த பாதாரமுடைய கந்தனை நினைத்து சும்மா இருக்கும் சுகத்தைப் பெறுவாயாக” என்கிறார் ஸ்ரீ அருணகிரிநாதர் (வேதாகமசித்ர – கந்தராலங்காரம் 17) “பஞ்ச பூதங்களால் அமைந்த இந்த உடலுக்கு அப்பால் சென்று, எங்கும் மௌனமே நிலவும், பரவெளியில், தனியாக, சொல் அற, நினைவும் அற இருப்பாயாக” என்று குருநாதராய் வந்து உபதேசம் அளித்த முருகா, உம்மை அடிபணிகிறேன் என்கிறார் “ஒருபூ தருமறி” என்று தொடங்கும் கந்தரலங்காரப் பாடலில். (45). ‘இதுதான் அதன் தன்மை’ என்று குறிப்பிட்டுக் கூற இயலாத மனம் வாக்கு முதலியவற்றை இழந்து ஒரு அசைவும் இன்றி பேசாமல் சும்மாயிருக்கும் சுகமான எல்லைக்குள்ளே புகுமாறு அருள்புரிந்த முருகா, உன்னை வணங்குகிறேன்” என்கிறார் “சொல்லுகைக்கில்லை” என்று தொடங்கும் கந்தர் அலங்காரத்தில். “சுகக்கடல் பொங்கச் சொல்லுணர்வு அடங்கச் சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா” என்கிறார் ஸ்ரீ ரமணமகிரிஷி தனது அக்ஷரமணமாலையில்.
ஆசிரியர், புத்தகத்தின் பெரும் பங்கை தருணகிரிநாதர் வரலாறு கூறுவதற்கும், திருப்புகழில் புகழை கூறுவதற்கும் எடுத்துக்கொண்டதால், ‘கந்தர் அனுபூதிக்கு உரிய பங்கு கிடைக்கவில்லையோ என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இருந்தாலும், அருணகிரிநாதரின் மற்ற படைப்புளை சிறிது அளவும் கந்தர் அனுபூதியை பெரிய அளவிலும் தெரிந்துகொண்ட நிறைவு ஏற்படுகிறது.
திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை கிருஷ்ணன்